பட்டப்பகலில் மீனவர் கொலை..! பின்னணியில் வெளியான அதிர்ச்சி காரணம்..! பரபரப்பான கரூர்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பிரதான சாலை, காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (49). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வந்தார். இவரது நண்பரான கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜா என்ற டீலக்ஸ் ராஜா (55) வெள்ளத்துரையின் கடையில் உதவிகளை செய்து வந்தார்.
வெள்ளத்துரை, அவரது நண்பரான மகாராஜா ஆகிய 2 பேரும் வியாழக்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுமார் 1:30 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், வெள்ளத்துரையையும், மகாராஜாவையும் சரமாரியாக அரிவாளால் தாக்கினர்.
இதில் கடையின் முன் பகுதியில் வெள்ளத்துரை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். வெட்டு காயங்களுடன் தப்பி ஓடிய மகாராஜாவை அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில் மகாராஜா சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த வெள்ளத்துரையை அவரது உறவினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் மோப்பநாய், தடவியல் நிபுணர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மீன் வியாபாரி உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம கும்ப கும்பலை தேடி வந்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மீன் வியாபாரி வெள்ளத்துரையை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினருடன் ஆய்வாளர் சுகா தேவி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெள்ளத்துரை கடை நடத்தி வரும் பகுதியில் கடை உரிமையாளர்கள் , அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது. வெள்ளத்துரை கடை அருகே சிக்கன் கடை வைத்திருக்கும் இனாம் மணியாச்சியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் (32) என்பவர் இல்லை என்றதும், போலீசார் சந்தேகம் அவர் மீது திரும்பியது.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய போது கார்த்திக் மதுரை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் பிரடெரிக் ராஜன் ஆகியோர் மதுரையில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த
காளியப்பன் மகன் சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு ஊராட்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (31) ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூன்று பேரும் வெள்ளத்துரை மற்றும் அவரது நண்பரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெள்ளத்துரையின் கடையின் அருகே விநாயகா சிக்கன் சென்டர் என்ற பெயரில் கார்த்திக் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
கார்த்திக் கடையை விட வெள்ளத்துரையின் கடையில் வியாபாரம் அதிகமாக இருந்து உள்ளது. இதனால் கார்த்திக்கு பொறாமை இருந்து வந்துள்ளது. வெள்ளத்துரை இருக்கும் வரை தனக்கு லாபம் இருக்காது என்று நினைத்த கார்த்திக். வெள்ளத்துரையை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது…
– லோகேஸ்வரி.வெ