ஓபிஎஸ் அணி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி புதிய கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம் என்று சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தலைமை பொறுப்பிற்காக அதிமுக கட்சி பல அணிகளாக பிரிந்து செயற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியுமாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார் அவர் பேசுகையில், காலையில் கண் விழிக்கும்போது அம்மாவின் புகைப்படத்தில்தான் கண் விழிக்கிறேன் இன்றும் கூட என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், கட்சிக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தர்மயுத்தம் செய்து வருவதாகவும் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால்விடுக்கும் வகையில் பேசினார், அதில், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருந்து கட்சியை நடத்துகிறார், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த பழனிசாமியை இந்த மக்களும் நாடும் மன்னிக்காது என்றும் துணை முதல்வர் பதவி டம்மி பதவி என்பதால் அதை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், எடபடிக்கு தைர்யம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம் என்றும் அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என்றும் கூறினார்.