நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட மருத்துவ குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.