மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், உலகில் உள்ள மக்கள் ஒன்றாகக் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் உத்ரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைப்பெறும் மகா கும்பமேளாவாகும்.
144 வருடங்ளுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா. 12 பூர்ண கும்பமேளாவிற்கு பிறகு நடத்தப்படுவதுதான் மகா கும்பமேளாவாகும். இது பிரயாக்ராஜ்ஜில் மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகர சங்கராந்தி தொடங்கி மகா சிவராத்திரி வரையிலான 44 நாட்கள் மட்டுமே மகாகும்பமேளா நடைபெறும். அப்படிப்பட்ட மகாகும்பமேளா கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 தேதி வரையில் நடைப்பெற்றது. கிட்டத்தட்ட 66 கோடி மக்கள் இந்த மகாகும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடினர். மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடினால், அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த மகா கும்பமேளாவை முன்னிட்டு கோகோ கோலா நிறுவனம் 1,400 நகரும் கடைகள் அமைத்து கோகோ கோலா பானங்களை விற்பனை செய்தது. இந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் கோகோ கோலா 18 கோடி பாட்டில்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் நடைபெறும் எந்த விழாவையும் விட கும்பமேளாவில்தான் அதிகளவில் கோகோ கோலா விற்றுள்ளது. கும்பமேளாவுக்கு வருகை தந்த 50 கோடி மக்களில் 27 சதவிகிதம் பேர் ஒரு முறையாவது கோகோ கோலாவை வாங்கி குடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.