14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றன. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வானிலை ஆய்வு மையம் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக மட்டுமின்றி புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடலோர பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி சூறாவளிக்காற்று குறைந்தபட்சம் மணிக்கு 35 முதல் அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.