இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடா குடிமக்கள் அதிகளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் 9 காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்கள் கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 8 தனி நபர்களுக்கு கனடா புகலிடம் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் பாடகர் கொலை உட்பட இந்தியாவில் நடந்த பல தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை அந்த நாட்டு அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காலிஸ்தான் தீவிரவாதியாக கருதப்படும் ஹர்தீப் என்பவர் கனடாவில் சுதந்திரமாக நடமாடி இந்தியாவுக்கு எதிரான செயலில் ஈடுப்பட்டதாக அறியப்படுகிறது. ஹர்தீப் அவர் வசித்த கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் கடந்த ஜுன் 18-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்கவாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நேற்று முன்தினம் கனடா பிரதமர் மற்றும் அதன்வெளியுறத்துறை அமைச்சர்ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஹர்தீப் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்தி பேசினார்.
இதைக் கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது எனவும், இந்தியா சட்டங்களுக்கு உட்பட்ட நாடு என்றும் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். இத்துடன், இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சுமத்தினார். இத்துடன் கனடாவின் பிரதமர் ட்ரூடோ, இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இது இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி அசாம் மற்றும் மணிப்பூருக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள 10 கிமீ சுற்றளவில் இந்த பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு அறிவுறுத்தி உள்ளது உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.