திருச்சியில் தனியாக சென்ற பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்று வழிப்பறி செய்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள வ.ஊ.சி. சாலையில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவி சீதாலட்சுமி, 53 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார்.
மைதானத்தில் இவர் மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அதனை நோட்டம் விட்ட மர்ம நபர், உருட்டுக்கட்டையால் சீதாலட்சுமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பின்னர் அவரை அங்கியிருந்து தரதரவென இழுத்துச் சென்ற அந்த நபர், அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பித்துவிட்டார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பெண்கள் தனியாக வெளியே செல்வது பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தீவிர நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு, அந்த மர்ம நபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமனேறியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பதும், தற்போது திருச்சி கீழக்கடை பஜாரில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் அவரைக் கைது செய்ய சென்ற போது, தான் திருடி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் செந்தில் குமார் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கீழே விழுந்த செந்தில் குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.