தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில், அண்ணாமலை தனது கருத்தை வாபஸ் பெறும் விதமாக பேசியுள்ளார்.
பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம் ஆகி வருவது குறித்து இருதினங்களுக்கு முன்பு அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, “கட்சியின் நன்மைக்காக ஜெயலிதா, கலைஞர் போன்றோர் தலைவர்களாக என்ன மாதிரியான முடிவுகளை எடுத்தார்களோ, அது போல் துணிச்சலான முடிவை நானும் எடுப்பேன்” என பதிலளித்தார். ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிடக்கூடாது என அதிமுக கண்டனங்கள் எழுந்தது. தமிழகத்தில் சில இடங்களில் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “ஜெயலலிதாவை ஒப்பிட்டு நான் கூறவில்லை. அரசியல் கட்சியில் சிலர் இடங்களில் மேனேஜரும் சில இடங்களில் தலைவரும் உள்ளனர். ஜெயலலிதா கூட டெபாசிட் போய் மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையை நான் தேர்ந்தெடுத்து வருகிறேன். பாஜகவை மக்கள் நம்பி வருகிறார்கள். மக்கள் பாஜகவை நம்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்” என அந்தர் பல்டி அடிக்கும் விதமாக பதில் கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.