பெங்களூரில் நடைபெறவுள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே நேற்று ராகுல்காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேசமயம் கர்நாடகா நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை பெங்களூருவில் நடைபெற உள்ள கூட்டத்தில் கர்நாடகா முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய உள்ளனர். கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், சித்தராமையாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
Discussion about this post