உடல் நலக்குறைவால் மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா மரணமடைந்த சம்பவம் கேரள திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா இன்று காலமானார். அவருக்கு வயது 76.
திங்கள்கிழமை மலப்புரத்தில் உள்ள வண்டூரில் கால்பந்து போட்டி நடைபெறும் இடத்தில் மயங்கி விழுந்த மாமுக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1979 ஆம் ஆண்டு வெளியான “அன்னியருடே பூமி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். காந்திநகர் 2வது தெரு, சந்தேசம், நாடோடிக்காட்டு, வடக்குநோக்கியந்திரம், சகோரம், ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், இன்னாதே சிந்த விசேயம், பெருமழக்காலம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 2004 மற்றும் 2008ல் கேரள மாநில விருதையும் வென்றவர்.
மாமுக்கோயா கடைசியாக நடித்த சுலைகா மன்சில் படம் ஏப்ரல் 21 அன்று திரைக்கு வந்தது. நடிகருக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
மாமுக்கோயா மறைவிற்கு கேரள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், விஜயராகவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















