திடீரென பற்றிய தீ.. பேருந்து ஓட்டுநரின் செயலால்… பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்..!
திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் தாஸ் இயக்கி இருந்தார்.
கோவை சித்திரா அருகே இன்று காலை 6.00 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது பேருந்தில் முன் பக்கத்தில் திடீரென புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக பேருந்தை ஓரங்கட்டி பயணிகளை இறங்கும்மாறு கூறினார்.
இதனை தொடர்ந்து, அதிகாலை என்பதால் தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர்உடனடியாக பேருந்தை விட்டு 30 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். பயணிகள் இறங்கிய சற்று நேரத்திலேயே பேருந்து மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கட்டுக்குள் அடங்காத தீ பேருந்து முழுவதும் பரவி எரிந்து நாசமானது.
இது குறித்து வழக்கு பதிவி செய்த பீளமேடு போலீசார் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டுநரின் துரிதமான செயலால் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் பதுகாப்பாக இறக்கிவிட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
-பவானி கார்த்திக்