விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த உறுதி..! இதில் இனி உடனடி நடவடிக்கை..!
மதுரை ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று (13.07.2024) மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனமானது நிலையான வளர்ச்சியை தொடர்ந்து கண்டு வருகிறது. உதாரணமாக மதுரை மாவட்டத்தில் சென்ற ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட பால் நாளொன்றிற்கு சராசரியாக 1 இலட்சத்து 20 ஆயிரமாக இருந்தது.
ஓராண்டு காலத்தில் 1 இலட்சத்து 70 ஆயிரமாக எட்டியுள்ளது. வருகின்ற காலத்தில் கொள்முதல் 1 இலட்சத்து 70 ஆயிரம் என்பது 2 இலட்சத்தை எட்டிவிடும் அளவிற்கு ஆவின் நிறுவனமானது வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதேபோன்று ஆண்டு முழுவதும் ஒரே சீரான விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவது. ஆவின் நிறுவனம் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குகின்ற பால் உற்பத்தியாளர்களுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பல்வேறு நன்மைகளை விவசாய பெருங்குடி மக்கள் பெற்று வருகின்றனர். உதாரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் மதுரை மாவட்டத்தில் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு விவசாய சங்கத்தின் மூலமாக ரூபாய் 90 கோடிக்கு மேல் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவிளை உயர்த்துவதற்கு முடியு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய கால்நடை பண்ணைகள்
அமைப்பதற்கு இளைஞர்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறோம்.
இத்திட்டத்தின் மூலமாக மதுரை மாவட்டத்தில் குறைந்த பட்சம் 700 நபர்கள் பயனடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். விவசாய பெருங்குடி மக்கள் பண்ணை அமைப்பதற்கு விரும்பினால் பால்வளத்துறை மற்றும் ஆவின் துறை சார்ந்த அலுவலர்களிடம் தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்.
பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனமானது அனைத்து கால்நடைகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பல இடங்களில் கால்நடை தவறிவிட்டால் விவாய பெருங்குடி மக்கள் ஒட்டுமொத்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே, அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் தங்களது கால்நடைகளை இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். மதுரை மாவட்டத்தை பொருத்தமட்டில் ஆவின் நிறுவனத்தை சார்ந்து இருக்கக்கூடிய கால்நடைகள் சுமார் 25 ஆயிரம் ஆகும்.
இந்த 25 ஆயிரம் கால்நடைகள் மட்டுமல்லாமல், பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இணைக்கப்படாத கால்நடைகளைக் கூட சங்கங்களில் இணைத்து அவர்களும் இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன்பெற செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், 85 சதவிகிதம் மானியத்துடன் கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
கால்நடை வளர்ப்பவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கால்நடை தீவனம் 20 சதவிகித புரதச்சத்துடன் நியாயமான விலைக்கு வழங்கி வருகிறோம்.
கால்நடைத்துறையோடு பால்வளத்துறையும் இணைந்து கால்நடை விவசாயிகளுக்கு போதிய அறிவுரைகள் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, டி.ஐ.சி மூலமாக இருக்கக்கூடிய கடனுதவி திட்டம், தாட்கோ, டாம்செட்கோ, டாம்கோ போன்ற நிறுவனங்கள் மூலாக வழங்கி வரும் கடனுதவி திட்டங்களில் விவசாய பெருங்குடி மக்கள்களை இணைத்து கூட்டங்கள் நடத்துவதற்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.
எனவே, பல்துறை சார்ந்த அந்த பயிற்சியினை நடத்துவதற்கு அறிவுரை வழங்கியிருக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனமானது ஒரு முக்கியப் பங்காற்றுகின்ற துறையாக ஆவின் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஆவின் நிறுவனமான மிகப்பெரிய இலக்கை எட்டும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனமானது தனியார் துறைக்கு இணையாக வளர்ச்சியடைந்து வருகிறது. உதாரணமாக கடந்த காலங்களில் மதுரை மாவட்டத்தில் ஆவின் மூலம் ரூபாய் 4 கோடியே 50 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 3 கோடியே 9 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆவின் நிறுவனமானது தங்களது உற்பத்தியில் வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும் பால் பொருட்கள் தரமானதாகவும், சமமான அளவீட்டிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மன்னனது கடமை மக்களை காத்தல் என்று கூறுவது சங்ககால இலக்கியம். அதுபோல, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு ஏழை-எளிய மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறரார்கள். அந்த வகையில், இந்த ஆவின் நிறுவனமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடும், ஒத்துழைப்போடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
என்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களின் பால் உற்பத்தி, பால் விற்பனை மற்றும் ஒன்றியங்களின் வளரச்சி திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்களுடன் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மதுரை ஆவின் பொது மேலாளர் திருமதி.ஆ.சிவகாமி அவர்கள் உட்பட மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
– லோகேஸ்வரி.வெ