குழந்தை தொழிலாளர் இல்லா எதிர்காலம்..! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிக்கை..!
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளார்
கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயல் என வேதனை தெரிவித்துள்ளார்
இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுவதால் ஒரு நாடு தனது சமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல் மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்
கல்விச் செல்வம் பெற வேண்டிய சமயத்தில், கடுமையான வேலைச் சுமைகளைச் சுமந்து நிற்கின்ற பிஞ்சு குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் அளித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே தமிழ்நாடு அரசின் அடிப்படை நோக்கம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கண்டறியப்படும் சூழலில், குழந்தைகளை உடனடியாக மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி அளித்து குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
எனவே, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்து பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி அளித்துள்ளனர்.
நம் நாட்டை வளமிக்க தொன்றாக மாற்றுவோம் என அனைவரும் சூளுரைப்போம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம் எனவும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத எதிர்காலம், அதுவே தமிழ்நாட்டிற்கு பொற்காலம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ