கடலூரை சேர்ந்த பத்மநாபன் – கவுசல்யா தம்பதிக்கு சரண்யா, லாவண்யா என்ற 2 மகள்களும், விவேக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பத்மநாபன் உயிரிழந்தார். இதையடுத்து கவுசல்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு கடலூர் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சங்கர் மூலம் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து பத்மநாபன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 69 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் சரண்யா, லாவண்யா ஆகியோர் குழந்தைகளாக இருந்ததால், அவர்களுக்கான பங்கு தொகை தலா ரூ.1½ லட்சம் பாலூரில் உள்ள கனரா வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு லாவண்யா, சரண்யா ஆகியோருக்கு 18 வயது பூர்த்தியானதால், அவர்களுக்கான இழப்பீடு தொகையை கேட்டு வக்கீல் ஜெய்சங்கர் மூலம் மனுதாக்கல் செய்தனர்.
அப்போது வழக்கு எண் 826/03 என்ற வழக்கிற்கு பதில் தவறுதலாக 1826/03 என்ற வழக்கில் உள்ள ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 540-ஐ பெற்றுக் கொண்டனர். இதுபற்றி அறிந்த நீதிமன்ற உதவி சிரஸ்தாரராக உள்ள குணாளன் என்பவர் 826/03 என்ற வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடியுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்ற ஒரு போலியான கடிதத்தை தயார் செய்துள்ளார்.
இதையடுத்து கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியுடன் அந்த கடிதத்தை கனரா வங்கியில் கொடுத்து கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதற்கிடையே 826/03 என்ற வழக்கில் மேலும் பணம் இருப்பதை அறிந்த வக்கீல் ஜெயசங்கர், அந்த பணத்தை பெறுவதற்காக மீண்டும் லாவண்யா, சரண்யா ஆகியோர் மூலம் இழப்பீடு தொகை கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக விசாரித்த போது தான், ஏற்கனவே 826/03 வழக்கில் இழப்பீடு தொகை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குணாளன் நீதிபதி வழங்கியது போல் போலி கடிதம் தயார் செய்து சத்தியமூர்த்தி, சிவதாஸ் உதவியுடன் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி, சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குணாளனை தேடி வருகின்றனர்.
இவர் கைது செய்யப்பட்டால் தான் நீதிமன்றத்தில் வேறு யாருக்காவது மோசடியில் தொடர்பு உள்ளதா ? இன்னும் எத்தனை பேருடைய வைப்பு நிதியில் இதுபோன்று மோசடி செய்துள்ளார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்பதால் போலீசார் குணாளனை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் லாவண்யா, சரண்யா ஆகியோர் மூலம் ஜெய்சங்கர் மீண்டும் இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், அவர்களும் மோசடியில் ஈடுபட முயன்றார்களா? இல்லையா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post