விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் இரண்டு மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த தரணி(வயது 19) என்பவர் இன்று அதிகாலை சுமார் 6.00 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட நபர் விழுப்புரத்தில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் இளம்பெண் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு விசாரணையையும் துரிதப்படுத்தினர்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மாணவியின் பக்கத்து கிராமமான மதுரபாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான கணேசன் என்பவர் தரணியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கணேசை விசாரணை செய்த போலீசார், தரணி தனது காதலை ஏற்காததால் அவரை கழுத்தறுத்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கணேசன் கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கொலையாளியை கொலை நடந்த 2 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்திருப்பது பாராட்டுக்களை குவித்து வருகிறது.