சென்னையில் தொடரும் கனமழை..! மீனம்பாக்கத்தில் பதிவான 16செ.மீ மழை..!!
சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரால் சாலைகள் குளம் காட்சி அளித்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தொடங்கிய கனமழையால் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி மற்றும் அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் அதிக மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழையும், நந்தனத்தில் 12 செ.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 10.7செ.மீ மழையும், குன்றத்தூரில் 8.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளில் அதிக மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.