கீழடி 9ம் கட்ட அகழாய்வில் மண்பாண்ட உற்பத்தி கூடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி 9ம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மண்பாண்ட உற்பத்தி கூடம் செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மாதம் 6ம் தேதி வீரணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன.
இதில் மூன்று குழிகள் முழுவதும் வழுவழுப்பான தரைதளம் கண்டெடுக்கப்பட்டதால் அதில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படாமல் நான்காவது குழியில் மட்டும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தன. இந்த ஒரே குழியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழியில் தோண்டப்படும் இடங்களில் எல்லாம் பானை ஓடுகளாக உள்ளன.
அதில் எழுத்துகளோ, படங்களோ இல்லாமல் வெறும் பானை ஒடுகளாக கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும் கரிமண் துகள்களும் கிடைத்துள்ளன. 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் து£ரத்தில் தற்போது அகழாய்வு நடந்து வருகிறது. 7ம் கட்ட அகழாய்வின் போது இரண்டு உலைகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
எனவே இந்த இடங்களில் மண்பாண்ட உற்பத்தி கூடங்கள், மண்பானைகள் இருப்பு வைக்கப்படும் குடோன்களாக செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. எனவே கரிமண் துகள்கள், பானை ஓடுகளை பகுப்பாய்விற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். பகுப்பாய்வின் முடிவில் இந்த இடத்தில் மண்பாண்ட உற்பத்தி கூடங்கள் செயல்பட்டிருப்பது பற்றி தெரியவரும்,
அருங்காட்சியகத்தில் அலைமோதும் கூட்டம்
கீழடியில் உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகத்தை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இணையதளங்கள், செய்தி தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் கீழடி அருங்காட்சியகம் குறித்து பிரமிப்பூட்டும் செய்திகள் தொடர்ந்து வருவதாலும் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்திய விதம் பலரையும் கவரும் வண்ணம் இருப்பதாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை அருங்காட்சியகம் கவர்ந்துள்ளது., 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை காண பலரும் ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர். வழிகாட்டிகள் இன்றி ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்து வடிவத்திலும் மெகா சைஸ் டிவிகளிலும் ஒளிபரப்படுவதால் பார்வையாளர்கள் பொருட்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.