திருப்பத்தூர் அடுத்த ஜெடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை மர்ம நபர்கள் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையின், கை பகுதியை சில மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உடைத்துள்ளனர். இதையறிந்து வந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த குரிசிலாப்பட்டு காவல்துறையினரிடம், அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இல்லையெனில், அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெறும் எனவும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மர்ம நபர்களை உடனடியாக கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.