சனாதனத்தை ஏற்றால் இந்து என்று சொல்லும் பார்ப்பனரும் பறையர்களும் அண்ணன் தம்பி என்று உறவாட முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பது தான் சாதியை ஒழிக்க ஒரே வழி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..
*கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த 30-க்கும் மேற்பட்ட நிகழ்சிகளில் பங்கேற்றார். மாலையில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மாடூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர் வழக்கறிஞர் தங்க. தாமரைச்செல்வனின் பெற்றோர் திருவுருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் பேசிய அவர்
*சனாதனம் குறித்து அவர் பேசுகையில், இன்று தேசிய அளவில் சனாதனம் குறித்து பலரும் விவாதிக்கிறார்கள், பிரதமர் மோடியே சனாதனம் குறித்து பேசுகிறார். இந்த சூழலை உருவாக்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. சிறுத்தைகள் வைத்த நெருப்பு இன்று இந்தியா முழுவதும் பற்றி படர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. சனாதனம் என்கின்ற கொள்கை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாகுபாட்டை கொண்டிருக்கிறது என்று பொருள்..
அத்துடன் தீட்டு என்கின்ற கொள்கையும் உள்ளீடாக கொண்ட கொள்கைதான் சனாதனம். அதற்கு ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கும்பல் வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவெல்லாம் மக்களை ஏற்கின்ற ஏமாற்றுகின்ற முயற்சி, இந்த சனாதன கொள்கையை நீர்த்துப்போக செய்ய வேண்டும் அதனை வீழ்த்த வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை போராடிய தலைவர் தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.. பெரியாரும் போராடினார்.. இவர்களுக்கெல்லாம் முன்னோடி பண்டித அயோத்திதாசர்.. பண்டிதருக்கும் முன்னாடி என்று சொன்னால் கௌதம புத்தர் என்பதை யாரும் மறுக்க முடியாது..
சாதியவாதிகள் எல்லோரும் தங்களை ஆண்ட வம்சம் என்கிறார்கள்.. சமத்துவவாதிகள் நாங்கள் எல்லோரும் ஞான வம்சம் என்று சொல்லுகிறோம் நாங்கள் அறிவு வம்சத்தைச் சார்ந்தவர்கள் கௌதம புத்தரின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இன்றைக்கு சனாதனத்தை வேரருப்போம் என்கின்ற குரல் தமிழகத்தில் ஒலிக்க தொடங்கி இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவாதம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, அவருடைய கனவு நனவாக போகிறது என்பதற்கு சான்று தான் இந்த விவாதம்.
சனாதனம் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்து, இரவு என்று ஒன்று இருந்தால் அதற்கு பகல் என்று ஒன்று இருக்கும், இருட்டு ஒன்று இருந்தால் அதற்கு வெளிச்சம் ஒன்று உண்டு, பொய் என்று ஒன்று இருந்தால் உண்மை என்ற ஒன்று உண்டு அதைப்போல் சனாதனம் என்று ஒன்று இருந்தால் அதற்கு நேர் எதிரானது ஜனநாயகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சனாதனம் என்ன என்று கேட்டால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று சொன்னால் போதும், அது சமத்துவத்திற்கு எதிரானது என்று சொன்னால் போதும், அது சகோதரத்திற்கு எதிரானது என்று பொருள்.
இந்தியா முழுவதும் எல்லோரும் இந்துக்கள் என்று சொன்னாலும் பார்ப்பனர்களும் பறையர்களும் ஒன்றாக சகோதரர்களாக வாழ முடியுமா? பார்ப்பனரும் இந்துதான் அருந்ததியரும் இதுதான் ஆனால் இவர்கள் அண்ணன் தம்பி என்று உறவாட முடியுமா? இந்துக்களில் யாரும் எந்தவித சகோதர உறவும் கொண்டாட முடியாது, சகோதரத்துவம் இல்லாத ஒரு அமைப்பு உலகிலேயே இந்து மத சமூக அமைப்புதான்.. பிற மதங்களில் சகோதரத்துவம் கூலோச்சுகிறது இந்து மதம் அதை ஏற்காத ஒன்று இதை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பது தான் சனாதனம். அந்த கருத்தை அந்த கோட்பாட்டை யார் எதிர்க்கிறார்களோ இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் ஒரு நிலையிலும் சமரசம் ஆகாது சாதி ஒழிப்பிற்கு அதுதான் வழி அப்படிப்பட்ட இந்த இயக்கம் தமிழ்நாடு என்ற எல்லையை கடந்து தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மகாராஷ்டிரா கேரளா என்று அந்தந்த மாநில மக்கள் தங்களை சிறுத்தைகள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்கள்.
அம்பேத்கர் தோன்றிய மராட்டிய மாநிலத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோன்றி வளர்ந்து வருகிறது. கேரளாவில் மணி விழா மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். கேரளா மூணாறில் அம்பேத்கர் சிலையையும் நிறுவி இருக்கிறார்கள்.. வழக்கமாக வட இந்தியாவில் இருந்து தான் தமிழகத்திற்கு தலைவர்கள் வந்து போனார்கள் முதல்முறையாக தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் பிற மாநிலங்களுக்கு பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒரு பேர் இயக்கமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியா கூட்டணி உருவாவதற்கு விடுதலை சிறுத்தைகளுக்கும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் இதற்கான பணிகளை திமுக போன்ற கட்சிகளும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும். வருகின்ற 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் ஆட்சி பீடத்திலிருந்து பிஜேபியை வீழ்த்த வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு அவர்கள் தப்பித்தவறி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் அவர்களை நாம் தூக்கி எறியாவிட்டால் அவர்கள் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் அது ஒன்றுதான் இந்தியாவிற்கு பாதுகாப்பு ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு என்று பேசினார்.