நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியது. அப்போது, பழைய நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறும் முன்பாக அதன் பெருமைகள் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, இன்று பிற்பகல் நாடாளுமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது.
இதில் முதல் நிகழ்வாக, மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.