லடாக் எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளது லடாக் மக்களுக்கு தெரியும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப் பயணத்தைத் தொடர்ந்து, அவர் நாட்டில் செல்லாத மேலும் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரிலுள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ள அவர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதைத் தொடர்ந்து நேற்று லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்த பயணத்தின் நோக்கம் நாட்டில் பாஜக – ஆர்எஸ்எஸ் பரப்பி வரும் வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்பதே ஆகும். நாட்டு மக்களிடம் அன்பைக் காட்டுவதே எனது நடைபயணத்தின் நோக்கம்.
நாட்டின் ஓர் அங்குல நிலத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை, ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். நம் நாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது லடாக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி உண்மையைச் சொல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அவர் லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிலதிபர் அதானி குழுமத்துக்கு வழங்கி வருகிறார். அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். லடாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சினைகள் உள்ளன. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உங்கள் முக்கியப் பிரச்சினைகளை அவையில் பேசுவேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.