புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த வாரம் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முதல்வரான பிறகு முதல்முறையாக டெல்லி சென்ற பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தபோது ”பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாபின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து பாடுபடுவோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.