உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்திலுள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு தசரா திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய இத்திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் வரும் 24 ம் தேதி நள்ளிரவில் நடைபெறுகிறது.
தசரா திருவிழாவில் மாலை அணிந்து விரதம் இருக்கக்கூடிய பக்தர்கள் அம்மன் , காளி , குரங்கு, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் பெற்று அதை சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தசரா திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம், மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.