கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
கடந்த மூன்று தினமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைப்பெற்று வந்தன. அதே சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்துப் பேசினர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி; மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நேற்று 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்திய தாயை கொன்றதற்கு சமம். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள் மணிப்பூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினோம். பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். மணிப்பூர் தொடர்பான எங்களது நிலைப்பாட்டில் உறுதியோடு உள்ளோம். மாதக் கணக்கில் மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது; மக்கள் கொல்லப்படுகிறார்கள். மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக்கேடானது. மணிப்பூருக்கு செல்லாமலேயே அதைப்பற்றி பேசுவது எப்படி?. மணிப்பூர் நிலவரம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதுதான் தற்போதைய சூழல்.
ஒன்றிய அரசு நினைத்திருந்தால் மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்திருக்கும், ஆனால் மணிப்பூர் கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை. பிரதமர் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூற வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல வாய்ப்புகள் இருந்தும் பிரதமர் அதை பயன்படுத்தவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு செல்வதற்கான அறிகுறிகள்கூட தெரியவில்லை. என் அரசியல் அனுபவத்தில் நான் எங்கும் கண்டிராத துயரங்களை மணிப்பூரில் கண்டேன்.
பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திர மோடிக்கு தெரியவில்லை. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனைதான் கூறமுடியும்; பிரதமர்தான் தீர்வு காண முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கால பிரதமர்கள், பாஜகவின் வாஜ்பாய், தேவகவுடா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதை பார்த்திருக்கேன். ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. பாரத மாதா என பேசியதை முதல்முறையாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். வரலாற்றில் முதல்முறையாக பாரத மாதா என்ற சொல் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் என்பவர் நாட்டின் பிரதிநிதி; அவருடைய பேச்சில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். 2024-ல் மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்பது எங்கள் கேள்வியல்ல; மணிப்பூர் மக்களின் நிலை என்ன என்பதே எங்கள் கேள்வி. மணிப்பூர் பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகள் பற்றி மட்டுமே பேசினார் பிரதமர் மோடி. நான் மீண்டும் சொல்கிறேன்; இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்துவிட்டது இவ்வாறு கூறினார்.
Discussion about this post