கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அதிகரிக்கும் உயிர் பலி எண்ணிக்கை..! தற்போதைய நிலை..?
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கள்ளசாராயத்தை அருந்தியவர்கள் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரவீன் (29), சுரேஷ்(46), ம.சுரேஷ்(45), சேகர்(61) ஆகிய 4 பேர் நேற்று இரவு உயிரிழந்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.. அதையடுத்து, 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
ஆனால் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62) மற்றும் இந்திரா (38) ஆகிய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்னும் 16 பேருக்கு அங்கு தொடர் சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது..
அதேபோன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும் வீரமுத்து (33), சிவா (32), அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55) ஆகிய 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75) தனகோடி (55) மற்றும் டேவிட் (28) ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கோவிந்தராஜை கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒழித்தனர்.
அதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மாதிரிகளை எடுத்து விழுப்புரம் தடய அறிவியல் பரிசோதனை மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.. அதில் சோதனை செய்ததில் மெத்தனால் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சேலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசு, ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் என்பவரை நியமித்துள்ளனர். அதேபோல மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்ததோடு, புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி என்பவரை நியமனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் பலியாகிவிட்டனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..